Sunday, 16 April 2017

பயங்கரவாதி பங்கர் பிரபா செய்த சொந்த இனத்தின் மீதான படுகொலைகள் -
===============================
"பிணங்களுடன் கிடந்து மீண்டேன்" : 1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” #கந்தன்_கருணை_படுகொலை” யில் இருந்து உயிர்தப்பிய #தைரி என்ற ஈழத்தவன் வாக்குமூலம்
---------------------------------------------

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே! அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான்! விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்…

அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும்! சில படித்த மனிதர்களுக்கு இது மிகச் சுளுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும் புலிகள் இயக்கத்தில் கூட இருந்திருக்கலாம் இவர்கள் எல்லோருமே தத்தம் விடுதலை இயக்கங்களில் சோரும் போது தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தமது உயிரையும் கொடுக்கத் தயாராகவே முன்வந்த இளைஞர்கள். தமது குடும்பம் வறுமையில் உழன்றாலும், திருமணம் முடிக்காத சகோதரிகள் இருந்தாலும் மனைவி மக்கள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் பள்ளிபடிப்பை சில வேளை பல்கலைக்கழகப் படிப்பையும் உதறித் தள்ளிவிட்டு ஒரு சிலர் தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தவர்கள்.
அவர்கள் இணையும் போது தாமும் போராட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றைத் தவிர வேறெந்த நினைப்புமின்றி எழுந்தமானமாகத் தமக்கு எட்டிய விடுதலை இயக்கங்களில் சேர்ந்தார்கள். இங்கு எமக்கு உணரக்கூடியதாக இருந்த ஒரு பிரதான விடயம் யாதெனில் 1983 ஜுலை இனக்கலவரம் உந்தித் தள்ளிய போராட்ட வேகத்தில் விளைந்த இப்போராளிகள் அப்போராட்டத்தாலேயே குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட முரண் நிலைதான்!
இக்கைதிகள் யாவரும் எப்படி இந்த சிறை முகாமில் அடைக்கப்பட நேர்ந்தது என்பதே எமது போராட்ட வரலாற்றின் ஒரு பகுதிதான் கசப்பான பகுதி.

1986 ஆம் ஆண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தில் புதியதொரு குணாம்சம், மிக மோசமான வடிவில் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் மாதம் டெலோ அமைப்பின் மீதான புலிகளின் தாக்குதலுடன் இது ஆரம்பித்தது. அடுத்தடுத்து புளொட், ஈ.பி.ஆh.எல்.எவ் என, ஈரோசைத் தவிர அனைத்து இயக்கங்களையும் அவ்வாண்டுக்குள் தடை செய்து முற்றுப்பெற்றது. (ஈரோஸை சில காலம் பயன்படுத்திவிட்டு பின்னர் இயக்கத்தைக் கலைத்துவிட்டு தம்முடன் சேர்ந்து விடும்படி புலிகள் உத்தரவிட்டனர்.)

இவ்வாறு புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் பலர் இச்சிறை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இறுதியாக 1996 டிசம்பர் 13ம் திகதி புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க உறுப்பினர்களே இங்கு அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 30 பேர் புலிகளால் விடுவிக்கப்பட்ட பின் இந்தியாவுக்குச் செல்வதற்காக படகு ஏற்பாடு செய்துவிட்டு, அதற்காகப் புங்குடுதீவுக்கு வேன் ஒன்றில் சென்றுகொண்டிருந்த வேளை, மீண்டும் புலிகளால் இடைமறிக்கப்பட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைப்பதாக தந்திரமாகப் பேசி, ஏமாற்றி அழைத்து வரப்பட்டு இச்சிறைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள். அவர்களுடன் புலிகளால் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரே இச்சம்பவத்தில் தப்பிவந்து இத்தகவல்களைக் கூறிய தைரி.

இதேபோல் இன்னும் ஒரு பகுதியினர் இந்தியாவிலிருந்து ஏமாற்றி வரவழைக்கப்பட்ட 30 ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள். மன்னாரில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தொலைத்தொடர்பு பரிவர்த்தனையாளர்களை துப்பாக்கி முனையில் வைத்து, அவர்கள் மூலம் தம்மை ஆபத்திலிருந்து காக்கும்படி இந்தியாவிலிருந்த தலைமைக்கு செய்தி அனுப்பச் செய்தனர்.

இதனை நம்பி படகில் வந்த 30 பேரைச் சுற்றிவளைத்துக் கைது செய்து, மன்னாரில் வைத்து விசாரணை நடத்திவிட்டு யாழ்ப்பாணத்தின் இச்சிறை முகாமுக்கு அனுப்பியிருந்தார்கள்.

இதைவிட, யாழ்ப்பாணத்தில் கைதான பல ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களும், பொதுமக்களில் சிலரும் அச்சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நகைக்கடை முதலாளி. புலிகள் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அனைவரும் வௌ;வேறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் மொத்தமாக எத்தனை பேர் இருந்தனரெனச் சரியாக அறியக் கூடியதாக இருக்கவில்லை. சுமார் 30 இறாத்தல் பாண் வாங்குவதைக் கருத்தில் கொண்டு 60க்கு மேற்பட்டோர் இருந்தனரெனக் கணக்கிட முடிந்தது. இங்கிருந்தோரை உற்றார், உறவினர் அல்லது வெளியார் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த சின்னதயான் என்பவரது மனைவிக்குக் குழந்தை பிறந்ததை அறிந்தும், மனைவி, குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் சாகும்போதும் தனது குழந்தையைப் பாராமலே சாக நேர்ந்தது.

அந்த இருளில் கடந்து கொண்டிருக்கிற கடிகார முட்களின் கணங்கள் ஒவ்வொன்றையும் காலன்தான் நகர்த்திக் கொண்டிருந்தான் என்பதை அறியாமல் அடைபட்டுக் கிடந்தார்கள் அவர்கள்.

இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு வாழவேண்டிய வயது அவர்களுக்கு. ஆனால் அவர்களின் விதியை மாற்றி எழுதிய எழுதுகோலாக எமது விடுதலைப் போராட்டத்தின் துப்பாக்கி மாறியது. அது இரத்தத்தையே மையாக்கி தனது மரணத் தீர்வை வரலாற்றில் பதிந்தது.

அன்று 1987 மார்ச் 30, இரவு சுமார் 9 மணியிருக்கும், யாழ்ப்பாணத்தை ஓர் அதிர்ச்சிச் செய்தி மெல்லக் கிலியிலாழ்த்தியது.

அன்றைய காலத்தில் புலிகளின் யாழ்ப்பாண இராணுவத் தளபதியான கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனேட் தாக்குதல் நடந்துவிட்டது என்பதுதான் அச்செய்தி. இத்தாக்குதலை யார் நடத்தினர் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது புலிகள் இயக்கத்துக்குள் கிட்டுவுக்கும் மாத்தையாவுக்குமிடையிலான அதிகாரப் போட்டியில் மாத்தையாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது என்று ஊகிக்கக் கூடியதாயிருந்தது.
இத்தாக்குதலின் பின் கிட்டுவை உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்கி இந்தியாவுக்கு எடுத்து பின் லண்டனுக்கு அனுப்பியதும், மாத்தையாவிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்ததும் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. இத்தாக்குதலில் கிட்டு காலொன்றை இழக்க நேரிட்டது. அவரின் மெய்ப்பாதுகாவலர் பலியானார்.

இச்சம்பவத்தையடுத்து என்ன விபரீதம் நிகழப் போகிறதோவென யாழ் நகரமே அச்சத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால், இச்சம்பவத்துடன் உருக்கொண்ட அந்த விபரீதம் தம்மை நோக்கி திசை திரும்பப் போகிறது என்ற ஆபத்தை அந்தச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு வெளியே என்ன நடந்திருக்கிறது என்பதே தெரியாதிருந்தது.

தைரி மேல் மாடியில் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாப்பாட்டு வேளைகளில் அவர்களைத் திறந்து விடுவர். அதுவும் சாப்பாட்டு வேளையாக இருந்ததால் அவர்கள் கீழே இறங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சுமார் 9.15 இருக்கும்,திடீரென அம்முகாமை நோக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. முதலில் அது மிஸ்ஃபயர் (தவறுதலான துப்பாக்கி வெடி) என்று தான் யாவரும் எண்ணினர். அம்முகாமில் நீண்ட நாள் இருந்ததில் தாம் கொல்லப்படுவோம் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்ட தைரி குசினியை அண்டிய முடுக்கொன்றில் மறைந்துகொண்டார்.

அவ்வேளை அருணா என்ற புலி உறுப்பினர் தனது 5, 6 உதவியாளர் சகிதம் மூர்க்காவேசத்துடன் உள்ளே புகுந்தான். அவன் வந்த வேகத்தில் வலது புற மூலையிலிருந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது, எம்-16 யந்திரத் துப்பாக்கியால் ஹிப் பொஸிஷனில் நின்று சரமாரியாகச் சுட்டான்.

துப்பாக்கியின் மகஸீன் தீர்ந்ததும், உதவியாளர்களிடமிருந்து மறு மகஸீன் வாங்கிப்போட்டு மறுபடி சுட்டான், சுட்டுவிட்டு அருகில் இருந்த மாடிப்படிகளால் ஏறி மேல் மாடிக்குச் சென்றான்.

அந்த வீட்டின் முகப்பில் பெரிய ஹோலிருந்தது. அதில் எதிரே இரு அறைகளிலும் கைதிகள் இருந்தனர். ஒரு அறையிலிருந்து மறு அறைக்கு வர வழியிருந்தது. இடப்புறமாக குசினியும் வலப்புற அறைக்கு அருகே மாடிப்படிகளும் இருந்தன.

வலப்புற அறையில் சூடுபட்டவர்கள் இடப்புற அறைக்குள் ஓடினார்கள் மேல் மாடிக்குச் சென்ற அருணா அங்கும் வெடிகளைத் தீர்த்துவிட்டு திரும்ப இறங்கி வந்து இடப்புற அறைக்குள்ளிருந்தவர்களை நோக்கிச் சுட்டான் சிறிது நேரம் தொடர்ந்து சுட்டுவிட்டு திரும்பிப் போய்விட்டான்.

சூடுபட்ட அஜித் என்பவருக்கு கைமுறிந்து எலும்பு தெரிய, வயிறு பிரிந்து குடல் வெளியே தள்ளியது, அதை முறிந்த கையின் எலும்பால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘தண்ணீர் தண்ணீர்’ எனக் கத்தினான் வலப்புற அறையில் றெஜி என்ற நெடிய சிவலைப் பொடியனுக்கு ரத்தம் ஒழுகியபடியிருந்தது. பலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யார் யார் சூடுபட்டனர், யார் யார் கொல்லப்பட்டனர் என்பதும் தெரியவில்லை.
தைரியும் இன்னும் சிலரும் வெளிக்கதவால் தப்பி ஓடினர். காவலில் நின்ற புலிகள் யாரடா என்று கத்தியபடி திரும்பச் சுட, ஓடி வந்தவர்கள் வெடிபட்டு கதவருகே விழுந்தனர். அவர்களோடு சேர்ந்து படுத்துவிட தைரிமேல் விழுந்திருந்த கங்கா என்பவருக்கு தலையில் வெடி பட்டு மூளை சிதறி தைரியின் முகம் மீது வடிந்தது. இரத்தம் வெள்ளம் போல் பரவியிருந்தது. தைரி அப்படியே இறந்தவர்களோடு இறந்தவன் போல் படுத்தபடி இருந்துவிட்டார். சென்றிக்கு இருந்தவர்கள் எஞ்சியிருந்தவர்களை இஷ்டப்படி எஸ்.எம்.ஜி களால் சுட்டனர். மேலே இருந்த மற்றைய இறந்த உடல்களும் இரத்தமும் தைரியை மறைத்திருந்தன.

அப்படிச் சடலங்களின் கீழ் புதைந்து கிடக்கையில் வெடிபட்டவர்களின் ஓலங்களும் முனகல் சத்தங்களும் கேட்டபடி இருக்கிறது. உயிர் பிரிகையில் ஒவ்வொருவரது மரண ஓசையும் அடங்கிச் செல்வது கேட்கிறது. அந்த ஓசை, குரல்வளை அறுபட்ட ஓர ஆட்டின் கதறல் போல், மனிதக் குரலேயற்ற வேறோர் பயங்கர குரலாக ஒலித்து, மூச்சிழுத்து, ஓய்வதைக் கேட்கும்போது உடல் அச்சத்தால் சில்லிட்டுப் போய்விடுகிறது.
கதிர் என்பவரும் வேறு சிலரும் மலசல கூடத்தின் மேல் இருந்த தட்டு ஒன்றுக்குள் ஏறி அங்கிருந்த புலித்தோலால் போர்த்தபடி பதுங்கிக் கொண்டனர்.

அருணா சுட்டு அதன்பின் சென்றிக்கு நின்ற புலிகளும் சுட்டு ஓய்ந்துவிட்டிருக்க, அடுத்ததாக சத்தியா என்பவன் வந்தான். சத்தியாவின் கீழ் தான் அந்த முகாம் இருந்தது. முகாமின் பொறுப்பாளராக பாலு என்பவன் இருந்தான்.

சந்தியா வந்ததும் அரைகுறையாய் உயிரோடிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றான். சத்தியா பிஸ்டலால் தான் சுட்டான். பின்னர் மலசல கூடத்துக்குப் போய் அங்கே மேலே ஒளித்திருந்தவர்களை நோக்கி இறங்கடா கீழே என்று கத்தியபடி சுட்டான், சூடு பட்டவர்கள் தொப்பென விழும் ஓசை கேட்டது. கதிர் குப்புற விழுந்து கிடந்ததை பின்னர் தைரி தப்பிச் செல்லும் போது காணமுடிந்தது.

இவ்வேளையில் வாகனச் சத்தம் கேட்டது வெளியே சென்ற அருணா திரும்பி வந்தான். அவன் வேறொரு முகாமில் வைத்திருந்த ராசீக், பாப்பா இருவரையும் இழுத்து வந்தான். வழமையாக இவ்விருவரையும் அருணாவும், சத்தியாவும் இம்முகாமுக்கு கொணர்ந்து மிக மோசமாகத் தாக்கிவிட்டு திரும்பக் கூட்டிச் செல்வது வழக்கம். ராசிக் என்பவன் மிகவும் நெஞ்சுறுதி கொண்டவன். எவ்வளவு அடித்தாலும் ‘நானும் ஆண் மகன் தான்ரா, போராடத்தான் வந்தவன், சாவுக்கு பயப்பிட மாட்டன். நீ கொல்லுறதெண்டா கொல்லு’ என்று எதிர்த்துக் கூறுவான். அவனை இனியில்லை என்ற அளவுக்கு அடித்து நொருக்குவார்கள்.

இந்த தடவை அழைத்து வரப்பட்ட போது முகாமிலிருந்த நிலைமையைப் பார்த்ததும் தமக்கு என்ன நேரப்போகிறதென்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ‘உங்களால என்ன செய்ய முடியும் சுடத்தான்ரா முடியும். நீங்கள் அழிஞ்சுதான்ரா போவியள், இருக்க மாட்டியளடா, எங்களை அவிழ்த்து விட்டுப்பாருங்கடா…’ என்று கத்தி இழுபறிப்படுகின்ற சத்தம் கேட்டது. சத்தத்தோடு சத்தமாக வெடி கிளம்ப ஐயோ ஐயோ என்ற ஓலம் எழும்பி படிப்படியாக ஓய்ந்து அடங்கியது.

அதையடுத்து அங்கு மௌனம் நிலவியது. அனேகமாக அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். இரத்தம் கணுக்கால் அளவு உயரத்துக்கு இருந்தது. இரத்த வாடையும், வெடி மருந்து நாற்றமும் மண்டி இருந்தது.
அருணாவும் சத்தியாவும் இறந்த உடல்களை ஏற்றிச் செல்வதற்காக வாகனம் எடுத்துவர வெளியே சென்றனர். ஒரே அமைதி சிறிது நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்த தைரி உயிரை கையில் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து குசினிக்குச் சென்று பின்புறமாக இருந்த கதவால் பாய்ந்து ஓடி அடுத்த வீட்டு வளவுக்குள் ஏறி விழுந்து தப்பிச் சென்றார். பின்புறமாக இன்னும் சிலர் தப்பிச் சென்றிருக்கக் கூடும். யார் யார் தப்பினார்கள் என்பது தெரியாது. ஆனால் முன்புறமாகத் தப்ப முயன்றவர்கள் சென்றியிடம் வெடிவாங்கி இறந்தார்கள்.

தைரி ஓடும்போது மீண்டும் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அநேகமாக உடல்களை அப்புறப்படுத்தவே வாகனங்களை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்த உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன என்பது தெரியாது. கல்லுண்டாய் பகுதிக்குக் கொண்டுபோய் எரித்ததாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் சம்பவ தினமன்று காலை கைதிகளைக் கொண்டு பாரிய ஒரு குழி வெட்டுவித்தார்கள். இது மலசல கூடத்துக்கான குழி என்றே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இது இவர்களைப் புதைப்பதற்கானதாக இருந்தால், கிட்டு தாக்கப்படுவதற்கு முன்னரே இக்கொலைத்திட்டம் தீட்டப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். கிட்டு மீதான தாக்குதல் அக்கொலைத்திட்டத்தை அன்றே நிகழ்த்த வழிசெய்திருக்கலாம். எவ்வாறாயினும் சுமார் 60 தமிழ் இளைஞர்கள் அந்த ஒரே இரவில் ஒரு வீட்டிற்குள் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுக் கறையை எப்படி எம்மவரால் நியாயப்படுத்த முடியும்?

இப்படி ஒரு படுகொலைச் சம்பவம் நிகழ்ந்ததை எப்படியோ அறிந்த அக்கைதிகளின் உறவினர்கள் சிலர் புலிகளின் முகாம்களுக்குச் சென்று வினாவினர். அப்படிக் கேட்ட போது புலிகள் பதிலளித்த முறை இப்படித்தான் இருந்தது.

(அவ்வாறு கேட்கச் சென்ற ஒருவர் கூறியது இது)

புலிகள்: கைதிகள் கொஞ்சப்பேர் தப்பியோடப்பாத்தவை. அவையளைத் தடுக்க சுடுபாடு நடந்ததில கொஞ்சப்பேர் செத்தவை.

உறவினர்: (ஒருவரது பெயரை குறிப்பிட்டு) அவருக்க என்ன நடந்தது.

புலிகள்: அவரில்லை

உறவினர்: இல்லையென்றால் செத்திட்டாரோ?

புலிகள்: ஓம்!

உறவினர்: அப்ப பொடியை (உடம்பை) எண்டாலும் தாங்கே, தாய் தகப்பனுக்கு அனுப்ப வேணும்.

புலிகள்: (உறுக்கி) அப்ப இருங்கோ…

போனவர்கள் நீண்ட நேரமாக பதில் ஏதும் சொல்லாதிருக்கக் கண்டு, அவ்உறவினர்கள் உள்ளே போய் மீண்டும் அவர்களைக் கேட்டனர்.

உறவினர்: தம்பி, ஒண்டும் பேசாமல் இருக்கிறியள்.

புலிகள்: உங்களுக்கெல்லே சொன்னனாங்கள் ஆள் இல்லையெண்டு.

உறவினர்: பொடியையெல்லே கேட்டனாங்கள்

புலிகள்: நாங்கள் எரிச்சுப்போட்டம்.

உறவினர்: (சற்றுக் கோபத்துடன்) அப்ப எழுதித் தாங்கோ, இப்பிடி நடந்திட்டுதெண்டு.

புலிகள் முறைத்துப் பார்க்க ஏனையோர் விபரீதத்தை உணர்ந்து அவ்வுறவினர்களை சாந்தப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்தனர்.


இங்கே மனுக்கள், முறைப்பாடுகள், நீதிமன்றங்கள், விசாரணைகள், விசாரணைக்கமிஷன் எதுவுமில்லை. இந்தப் பதிலோடு விடயம் முடியவேண்டியது தான்.
ஏப்ரல் 2000 வெளியான அமுது சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ என்ற ஆக்கம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலைகளை ஒத்த மார்ச் 30 படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

கற்பனை சம்பவம் அல்ல. நிதர்சனமான உண்மை சம்பவம்.




கந்தன் கருணைப் படுகொலைகள் (சாகரன்)

30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.

பலரும் அறிந்ததும் உலகம் முழுவதும் பிரசாரப்படுத்தப்பட்டதும் இலங்கையின் வெலிக்கடை சிறைப் படுகொலை. இது இரண்டு நாட்கள் நடைபெற்று 57 உயிர்களை கொன்ற சம்பவம். இது எம்மவர் மீது எம்மவர்களால் நடத்தப்பட்ட படுகொலை அல்ல. எமது மண்ணில் நடைபெற்ற கொலையும் அல்ல எம்மவர் முன்னிலையில் நடைபெற்ற கொலையும் அல்ல இதில் உயிர் தப்பிய கைதிகள் பலர் இன்றும் உயிருடன் வாழும் சாட்சியங்களாக இருக்கின்றனர். உயிர்தப்புவதற்குரிய எதிப்புப் போராட்ட வாய்புக்கள் இருந்த கொலை இது. ஆனால் கந்தன் கருணைப் படுகொலையில் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்கள் எல்லாவகையிலும் அடைகப்பட்டிருந்த நிலையில் நடாதப்பட்ட கொலை.

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்; சிறையில் இருந்த தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளின் உறுதுணையுடன் சிறையில் இருந்த பேரினவாத சமூக விரோதமிகளால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் இலங்கையின் அன்றைய ஜேஆர் அரசு இருந்து. ஆனால் இதனைவிட அதிகமான கொலைகள் வெறும் விநாடிக்குள் தமிழ் மொழி பேசுபவர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மீது தாமும் மக்களுக்காக போராடப் புறப்பட்டவர்கள் என்பதினால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் விடுதலை அமைப்பு என்று தன்னபை; பிரகடனப்படுத்திய பாசி புலிகள் அமைப்பும் அதன் தலைமைப் பீடமும் இருந்தது.
வெலிக்கடை படுகொலையை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டனமும் விசாரணையும் கோரி நிற்கின்றன. இலங்கை அரசின் தரப்பில் சந்திரிகா பண்டாரநாயக்காவால் மன்னிப்பும் வருத்ததும் தெரிவித்தாகிவிட்டது. ஆனால் எம்மவரால் சிறைப் பிடிக்கப்பட்டு போராடும் உரிமை மறுக்கப்பட்ட போராளிகளின் கொலைக்கான விசாரணையோ வருத்தங்களே எத்தரப்பிலிருந்து இதுவரை வந்ததாக அறிய முடியவில்லை. ஏன் இந் நிகழ்வு நடைபெற்றதாக பலரும் அறிந்திருக்கவும் இல்லை. அன்றைய தமிழ் பத்திரிகைகளும் கைதிகள் தப்பி ஓட முற்பட்ட வேளையில் 17 துரோகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ‘சுடச் சுடச்’ செய்திகளை வெளியிட்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியதாக புழுகாங்கிதம் அடைந்து ‘பத்திரிகா தர்மத்தை’ தோண்டிப் புதைத்துக் கொண்டன.

கந்தன் கருணை படுகொலை என அறியப்பட்ட இக் கொலையை புலிகளின் தளபதி கிட்டுவின் காலை உடைத்த குண்டெறிவின் தொடர்சியாக அவனின் விசுவாசி அருணாவினால் நிகழ்த்தப்பட்டது. நல்லூருக்கு அருகில் இருக்கும் கந்தன் கருணை என்ற இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்து பின்பு யாழ் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் சிவப்பிரகாசம் ஒழங்கை என்ற பிரதான விதியிற்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் நிகழ்த்தப்பட்டது. இதில் அதிகம் மரணத்தை தழுவியவர்கள் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் என்ற விடுதலை அமைப்பு போராளிகள். மேலும் புளொட், ரெலோ அமைப்பினரும் சில பொதுமக்களும் இதில் அடங்குவர்.

இலங்கை அரசின் இராணுவத் தளபதி கொத்தலாவலை இற்கும் புலிகளின் கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தியிற்கும் இடையே மலர்ந்த உறவில் இலங்கை அரசின் சிறைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவன் அருணா. தனது நேரடித் தலைவன் கிட்டிற்கு செய்த விசுவாசச் செயற்பாடு இந்த கொடுங் கொலைச் சம்பவம் ஆகும்.

கல்வியங்காடு செட்டி மீது கொண்ட பயம் என்று ஆரம்பித்து கண்ணாடி பத்தனை வவுனியாக் காட்டிற்குள் வைத்துக் கொலை செய்தது என்ற ஆரம்பித் கொலைகள் காதலித்தான் என்பதற்காக பற்குணத்தை காவுகொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. இறுதியில் காதலுக்காக உயிரைக் காவு கொள்ள கொள்கை வகுத்தவனே மையல் கொண்டு காதல் மணம் புரிந்தது தண்டனை இல்லை என்று சட்டம் இயற்றக் காரணம் ஆகிற்று என்பது வக்கிர வரலாறு ஆயிற்று.

இன்பம், செல்வம், இறைகுமாரன், உமைகுமாரன் என்று விரிவடைந்து சுந்தரத்துடன் வீரியம் கண்ட கொலை சர்வ தேசப் பாசறையில் பயிற்சி பெற்ற போராளி றேகனின் கொலை வடிவில் மாற்றம் பெற்று யாழ் கோட்டடை இராணுவத்தின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் அமீன் கொலை என்று விரிவாக்கம் அடைந்து. சகோதரப் படுபொலையை விரும்பாதவர்கள் என்பதை தமக்கு சாதமாக்கி ஐக்கிய? முன்னணியிற்குள் இருந்த வண்ணமே கொலைகளைச் செய்தனர்.

ரெலோவை தடை செய்கின்றோம் என்று அதிகாரத்தை தமது கைகளில் எடுத்தவர்கள் யாழ் வீதியெங்கும் உயிருடனும் குற்றயிராகவும் போரளிகளை ரயற் போட்டுக் கொழுத்திய போது கேள்விகளை எழுப்பாது நின்றதன் விளைவுகள் இன்றைய நிலமைகளுக்கு அத்திவாரத்தை போட்டுவிட்டது. நாகரீக சமூகம் என்று தம்மை தம்பட்டம் அடிக்கும் யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் மௌனம் இந்தக் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் அளவிற்கு புலி பாசிசம் அவ்வளவு வீரியம் குறைந்ததாக இருக்கவில்லை.

பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பின் போராட்ட செயற்பாட்டை தடைசெய்து போரளிகளை முடிந்தவரை சிறைபிடித்து பின்பு கொன்றும் குவித்தனர இதே விடுதலைப் புலிகள். இதில் ஒரு உச்சக்கட்ட நிகழ்வுதான் கந்தன் கருணைப் படுகொலை. யாதும் தாமாக நின்ற பின்பு மாற்றுக் கருத்தாளர்கள் பொதுமக்கள் என்று கேள்வி எழுப்பியவர்களை சிறையில் அடைத்து வெளியில் விடாமல் கொலைகள் செய்ய மனித உரிமை மீறல்கள் இதுவரை எந்த ஜநா சபையிலும் கேள்விகளுக்குள் உள்ளாக்கப்படவில்லை.

துணுக்காயில் 1990 களில் நடாத்திய புலிகளின் வதை முகாமிலிருந்து உயிருடன் தப்பியவர்கள் பல ஆயிரம் பேரில் சில பத்துப் பேரே. இதுவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மனித அவலமாகும். கணக்கு காட்டப்பட முடியாக சிறைச்சாலை வதைகளும் படுகொலைகளும். இவர்களின் ஆத்மசாத்திக்கு சடங்குகள் செய்யப் புறப்பட்டால் எம்நாட்டில் உள்ள பூசகர்கள்ஆண்டு பூராக செய்தாலும் முடிவடையாத நிகழ்வாக நீண்டு செல்லும் வரலாற்றை இது பதிவு செய்து நிற்கும்.

சிறைபிடித்து வைத்திருந்தவர்களை இலங்கையில் அதிகம் கொன்றவர்களை இன்று ஜநாவில் நிறுத்த வேண்டிய காலம் மனித உரிமை பேசும் பலரும் யுத்தக் குற்றம் பேசும் பலரும் இதற்கான திகதிகளை 1980 களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைப்பதே சரியானது. கொலைகள் அது எந்த அமைப்பினால் நடைபெற்றிருந்தாலும் எந்த நாட்டு இராணுவத்தினால் நடாத்தப்பட்டிருந்தாலும் அதற்கான விசாரணைகள் நடைபெற்றே ஆகவேண்டும். மாறாக 2009 மே மாதம் என்று திகதியை குறுக்கிக் கொள்வது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.

விடுதலை அமைப்புக்கள் பலவும், தமது தவறான செயற்பாடுகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கும் நிலையில் இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்காது இருப்பவர்கள் புலிகளும் அவர்களின் பிரநிதிகளுமே. புலிகளால் வலிந்திழுக்கப்பட்ட ஆயுத மோதல்களின் போது ஏற்பட்ட தவறுகளுக்காக குறிப்பாக இந்திய இராணுவ பிரசன்ன காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக ஈபிஆர்எல்எவ் தமது வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டிருக்கும் நிலையில் மற்ற எவரும் அவ்வாறு செயற்பட்டதாக அறிய முடியவில்லை. புலிகளையத் தவிர ஏனைய விடுதலை அமைப்புக்கள் தமது அமைப்புக்களின் கொள்கை வழித்தவறுகளாக அல்லாமல் நடைமுறைத் தவறுகளாக ஏற்பட்ட மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் எடுகப்படவேண்டும்.

புள்ளி விபரங்களின் படி இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எமது ஆயுதப் போராட்டம் சம்மந்தமான மீள்பார்வையில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயம் ஆகும்,

No comments:

Post a Comment